கரூர், ஆக. 28: கரூரில் ஊரக வளர்ச்சித்துறை ஒய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கரூரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் அரியநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகம், பொருளாளர் சதாசிவம் உட்பட அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், ஒய்வூதியர் குடும்ப ஒய்வூதியர்களுக்கு மருத்துவப் படியாக மாதம் ரூ. 1,000ம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஒய்வூதியம் வழங்க அரசாணை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாழ்நாள் சான்று அளிக்க வரும் ஒய்வூதியர்களுக்கு ஒய்வூதிய புத்தகத்தில் கடைசியாக பெற்ற ஒய்வூதிய விபரங்களை முறையாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.