கரூர்.ஏப்,5: கரூரில் நேற்று 103 டிகிரியை தாண்டி வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். தமிழகத்தில் அதிக அளவு வெயில் தாக்கும் மாவட்டமாக கரூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் க. பரமத்தியில் அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் நேற்று கரூரில் வெயில் அளவு103 டிகிரி அதிகமான காரணத்தால் பொதுமக்கள் பகல் வேளையில் வீட்டில் முடங்கும் நிலை உள்ளது.
வெயில் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் கையில் தண்ணீர் பாட்டில், நீர் மோர் பந்தல், குளிர் பானங்கள், இளநீர், நுங்கு, சர்பத் ஆகியவற்றை கடைகளில் அதிக அளவு வாங்கி அருந்தினர். மேலும் கரூரில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் கரூர் நகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதி பாளையம், தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளில் புளிய மரத்தின் நிழல்களில் அதிகமான அளவு கம்பங்கூழ் விற்பனையாக செய்யப்படுகிறது. அதேபோல் கரூரின் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி விற்பனையும் சூடு பிடித்துள்ளது.