கரூர், செப். 2: கரூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை டவுன் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் வடிவேல் நகர் அடுத்துள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(80). இவரின் மனைவி அமராவதி (75). நேற்று முன்தினம் காலை சுப்பிரமணி, அரவக்குறிச்சிக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டார்.
இந்நிலையில், அன்று மாலை 3 மணியளவில், மர்ம நபர் ஒருவர் அமராவதியின் வீட்டுக்குள் சென்று, கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், டவுன் போலீசார் சம்பவ இடத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதே பகுதியை சேர்ந்த 40வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரை டவுன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.