கரூர், ஆக. 25: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (22). எம்பிஏ பட்டதாரி. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (19). இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவரின் குடும்பத்தினர் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பெரியார் கொள்கைகளை பின்பற்றி வந்த ரஞ்சித்குமார், பெரியார் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் பெரியார் சிலை முன்பு, பெரியார் ஆதரவாளர்கள் முன்னிலையில் ரஞ்சித்குமாரும், ஜெயலட்சுமியும் மாலை மாற்றி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், பெரியார் ஆதரவாளர்கள்கலந்து கொண்டனர்.