கரூர், ஆக. 28: கரூர் மாநகராட்சி பகுதியில் பழுதடைந்த நிழற்குடைகளை சீரமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து வாங்கல், மண்மங்கலம், வெங்கமேடு, ரயில்வே நிலையம், பசுபதிபாளையம், புலியூர், நெரூர், சோமூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேரூந்துகளும் சர்ச் கார்னர் வழியாக சென்று வருகிறது. இந்த பகுதியில் இருந்து தினமும் ஏராளமானோர் பேரூந்துகளில் பயணம் செய்கின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சர்ச் கார்னர் சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைத்து தரப்பட்டது.
இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக, மேற்புறம் சிதிலடைந்தும், உட்புற இருக்கைகள் அனைத்தும் உடைந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே போல், சுங்ககேட், வெங்கமேடு, வாங்கப்பாளையம் நிழற்குடைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. எனவே, இந்த நிழற்குடைகளையும் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி சீரமைத்து தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.