கரூர், ஜூன் 24:கரூரில் இருந்து புலியூர், பி.வெள்ளாளப்பட்டி, அடுக்குமாடி குடியிருப்பு, சீத்தப்பட்டி, கத்தாழப்பட்டி வரை போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.கூட்டத்தில், கரூர் மாவட்டம் புலியூர் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:புலியூர் அடுக்குமாடி குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. குடியிருக்கும் பகுதியை ஒட்டி சீத்தப்பட்டி, கத்தாழபட்டி போன்ற ஊர்கள் உள்ளன. இந்த பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்ல சிரமப்படுகின்றனர். வேலைக்கு செல்பவர்களும் இதன் காரணமாக அவதிப்படுகின்றனர். இந்த குடியிருப்பில் மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் வசித்து வருகின்றனர். எனவே, இந்த பகுதியினருக்கு போக்குவரத்து வசதி முக்கியமான தேவையாக உள்ளது.
எனவே, கரூரில் இருந்து புலியூர், பி.வெள்ளாளப்பட்டி, அடுக்குமாடி குடியிருப்பு, சீத்தப்பட்டி, கத்தாழப்பட்டி வரை போக்குவரத்து வசதி செய்து தந்தால் இந்த பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு பேருந்து, அல்லது மினி பேருந்து, நகரப் பேருந்து சேவையை கொண்டு வர ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.