போச்சம்பள்ளி, ஏப்.16: போச்சம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்புகள் எரிந்து சேதமடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மயிலம்பட்டியை சேர்ந்த விவசாயி பிரபு. இவர் அதே பகுதியில் 2 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதால், கரும்பு தோட்டம் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போச்சம்பள்ளி போலீசார், கரும்பு தோட்டத்திற்கு யாரேனும் தீ வைத்தனரா? அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.