Sunday, February 25, 2024
Home » கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய

கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய

by Karthik Yash

திருவண்ணாமலை, ஜன.20: திருவண்ணாமலை மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், விவசாய சங்க பிரதிநிதிகள் கோ.எதிரொலி மணியன், மணிகண்டன், தென்கரும்பலூர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் விபரம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுப்பணித்துறை ஏரிகள், நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்ட, இயந்திரங்களை பயன்படுத்தாமல் மனித உழைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டா மாறுதல் தொடர்பாக அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வழங்கிய பட்டாக்களை உடனுக்குடன் அரசு கணக்கில் ஏற்ற வேண்டும். கலசபாக்கம் பகுதியில் விவசாயிகளின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்படும் வாகனங்களை திரும்ப பெற முடியாமல் பல நாட்கள் அலைய வேண்டியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலா சர்க்கரை ஆலை மற்றும் போளூர் தரணி சர்க்கரை ஆலை ஆகியவற்றில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய கரும்புக்கான தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். 2 ஆலைகளிலும் தற்போது அரவை நடைபெறவில்லை. எனவே, நிலுவைத்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை நிலங்களில் எலித் ெதால்லை அதிகமாக உள்ளது. எலிகளுக்கு மருந்து வைத்து கொல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எலி தொல்லையில் இருந்து விடுபட வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

அதைத்தொடர்ந்து, கலெக்டர் முருகேஷ் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். அதனால், தற்போது 11 வருவாய் உள்வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. மேலும், 10 வருவாய் உள்வட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும், திறந்தவெளி கிணறுகளை அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆழ்துளை கிணறுகளை ஊக்கப்படுத்தவில்லை. அதனால், இப்போது 10 அல்லது 150 அடியில் தண்ணீர் கிடைக்கிறது. 100 நாள் வேலைத்திட்டத்தில் 2 ஆண்டுகளில் ₹400 கோடி மதிப்பில் பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம். விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்கிற, மிகப்பெரிய மாவட்டம் திருவண்ணாமலை. எனவே, சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனாலும், ஒட்டு மொத்த அளவில், இந்த மாவட்டம் மாநில அளவில் சிறப்பான மாவட்டமாக இருக்கிறது. அரசு வழங்கிய பட்டாக்களை அரசு கணக்கில் ஏற்ற தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

five + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi