திசைகாட்டும் தெய்வீகம்! 17 திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்பழகுபவர்கள் அனைவரிடமும் பாரபட்சம் அற்ற பாசாங்கு இல்லாத பரிவைக் காட்டு வதே படிப்பின் பயன். ஆனால், தற்காலத்தில் படித்தவர்கள் பல பேர் மற்றவர்களின் துயரத்தில் பங்கு கொள்வதில்லை! சுற்றியிருப்பவர்களிடம் பாராமுகமாகவே பலர் வாழ்கின்றார்கள். இவ்வளவு ஏன்? வீட்டில் இருக்கும் வயதான தாய் தந்தையர்களிடம் ஒப்புக்காகக் கூட ஒரு பரிவுச் சொல் பரிமாறுவதில்லை. முகம் கொடுத்து பேசுவதில்லை. திருவள்ளுவர் இப்படிப் பட்டவர்களை வெகுவாகக் கண்டிக்கிறார். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.மனிதப் பண்புகளில் முதன்மை பெறுவது கருணைதான்! இரக்கம், அன்பு, கருணை, பரிவு இவைதான் மனித குலத்தின் முதல் சொத்து என்கின்றனர் சான்றோர்கள். சக மனிதர்களிடமே கருணை காட்டாத இக்காலத்தவர்கள், பிற உயிரினங்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.குறட்பாவைக் கூர்ந்து கவனியுங்கள். ‘பிறரின் நோய்’ என்று வள்ளுவர் கூறவில்லை. ‘பிறிதின் நோய்’ என்கின்றார். அப்படி என்றால், ஐந்தறிவு வரை உள்ள உயிரினங்கள் கஷ்டப்படுவதைக் கூடப் பார்க்க சகிக்காமல் பரிதாபப்பட்டு அவ்வுயிர்கள் மேல் இரக்கம் கொண்டு உதவும் மனப்பான்மையே மனிதப் பண்பில் தலையானது. உருக்கம் என்னும் உயரிய பண்பே ஒரு உருவம் பெற்று வந்தது போல், இப்பூவுலகில் தோன்றி வாழ்ந்தவர் அருட்பிரகாச ராமலிங்கர். அவர் பாடி அருளிய திருவருட்பாவைப் பார்க்கலாமா?“வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்வாடினேன் பசியினால் இளைத்தேவீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்தவெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்நேருறக் கண்டுளந் துடித்தேன்ஈடில் மானிகளாய் ஏழைக ளாய்நெஞ்சுஇளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.”‘உனக்கென்ன கல்நெஞ்சமா? சற்றும் இரக்கம் காட்டமறுக்கின்றாயே!’ என்று உலகியலில் பேசுவதைப் பலர் கேட்டிருக்கலாம். மிருதுவான சதையில்தான் இதயப்பகுதியை இறைவன் அமைத்திருக்கின்றார். ஆனால், அது கல்லாக அல்லவா பலருக்குக் காணப்படுகிறது!‘கல்லேனும் ஐய ஒரு காலத்தில் உருகும்! என்கல்நெஞ்சம் உருகவிலையே!என்று பாடுகிறார் தாயுமானவர்.கந்தர் அனுபூதி பாடிய அருணகிரி நாதர் கூறுகிறார்;நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்செஞ்சொற் புனை மாலை சிறந்திடவேபஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.கருணை உள்ளம்தான் கடவுள் இல்லம் என்று அனுபூதி மூலம் அருணகிரியார் உரைக்கின்றார். பக்தர் ஒருவர், வைணவ விடி வெள்ளியாக விளங்கிய ஸ்ரீராமானுஜரை சென்று பணிந்தார்.‘அன்பு கூர்ந்து எனக்கு ஆண்டவனை அடையும் வழிமுறைகளை தாங்கள் வியக்கி அருள வேண்டும் என்று விண்ணப்பம் செய்து கொண்டார். ‘நாளை அதிகாலையில் இவ்விடத்திற்கு என் அன்பு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு குழுவாகவா! அனைவருக்குமாக நான் உபதேசிக்கின்றேன்’ என்றார்.‘சுவாமி! எனக்கு எவர் மீதும் நம்பிக்கையோ, பற்றோ கிடையாது!’ ‘பிறரிடம் அன்பு செலுத்தவோ, நம்பிக்கை வைக்கவோ இயலாத உன்னால், தெய்வத்தை எப்படி நெருங்க முடியும். கடவுள் வேறு கருணை வேறு அல்ல! அனைவரிடமும் அகம் கலந்து அன்பு பூவதேஆண்டவன் வழிபாடு! என்றார் மகான்.உயிர்களிடத்து அன்பு வேணும்! தெய்வம்உண்மையென்று தான் அறிதல் வேண்டும்.என்று பாடுகிறார் மகாகவி பாரதியார். வறுமையில் வாடிய குசேலர் தன் இளமைப்பருவ தோழனாக இருந்த கண்ண பெருமானைக் காணச் செல்கிறார். ‘‘நெருப்பில் கூட படுத்து உறங்கி விடலாம். வாட்டும் வறுமையில் இத்தனை மழலைச் செல்வங்களுடன் எப்படி வாழ்வது. உங்கள் பள்ளி நண்பரான கண்ணனைச் சென்று காணுங்கள். அன்பளிப்பாக நம்மால் முடிந்த இந்த அவலை எடுத்துச் செல்லுங்கள்’’ என்ற மனைவியின் சொல்லை மறுக்க முடியாமல் கால் நடையாகப் புறப்பட்டு மதுரா புரியின் மன்னனான கண்ணன் மாளிகையை நோக்கி நடந்தார். நடுப்பகல். வெயில் வாட்டிவதைக்கிறது அவர் நடந்து செல்லும் சாலையின் இருபுறமும் நிழல் பரப்பும் குளிர் தருக்கள்.ஆனால், குசேலர் கொதிக்கும் வெயிலில் சூடாகித் ததிக்கும் பாதையின் நடுவே பாதம் பதித்படி தன்கையிரண்டையும் தலைக்குமேல் தூக்கி கும்பிட்டபடி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று உச்சரித்த வண்ணம் நடந்து போகின்றார் என்று கூறுகிறது குசேல உபாக்கியானம்! வலமும், இடமும் குளிர் நிழல் விரிக்கும் மரங்கள் அடர்ந்திருக்க குசேலர் நடுவீதியில் தகிக்கும் வெப்பத்தில் நடப்பதற்கு என்ன காரணம் தெரியுமா?‘சீத நீழற்செலில் சிற்றுயிர்த் தொகைபோத சாம்பும் என்று எண்ணிய புந்தியான்ஆதவன் தவழ் ஆறு நடந்திடும்காதல் அங்கை விரித்துக் கவித்தரே!எரிக்கும் வெயினை எலும்பும், நரம்பும், சதையும் கொண்ட மனிதர்களே தாங்கிக் கொள்ள முடியாத போது, எலும்பே இல்லாத எறும்புகள், சிற்றுயிர்கள் என்ன பாடுபடும்! நிழலில் அவை ஒதுங்கி தஞ்சம் அடைந்திருக்கும். நாம் நிழலில் நடந்தால் நம் காலடிபட்டு கணக்கற்ற சிற்றுயிர்கள் இறந்து விடுமே என எண்ணி கருணை மிகுந்துதான், தன் காலடிகளை நிழலில் பதிக்கவில்லையாம் குசேலர்.எறும்புகளுக்கும், கருணை காட்டிய இரக்க சிந்தை கொண்ட முன்னோர்கள் வழிவந்த இன்றைய தலைமுறையில், ஒரு சிலர், துன்புறுத்துவதையே கலையாகக் கொண்ட மிகுந்து விட்ட கொடுமையை என்ன சொல்ல! எறும்புகளின் தொல்லை தாங்க முடியவில்லை. மருந்து தெளித்து அழித்து விடலாம் என்றெண்ணிய பெரியவர் ஒருவர் தன் பேரனுடன் கடை வீதிக்குச் சென்றார்.‘என்ன வாங்கப் போகிறீர்கள் தாத்தா’ என்று கேட்ட சிறுவனிடம் எறும்பு மருந்து என்றார் பெரியவர். ‘ஏன்? நம் வீட்டு எறும்புகளுக்கு உடம்பு சரியில்லையா’? என்று கேட்ட பேரனுக்கு தகுந்த பதில் சொல்ல முடியாமல் தவித்தார் தாத்தா. வள்ளலார் பாடுகின்றார்;அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்!ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்!…