தர்மபுரி, ஆக.6: தர்மபுரியில், நாளை (7ம்தேதி) கருணாநிதி நினைவுதின அமைதி ஊர்வலம் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் நாளை (7ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தர்மபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர், கிளைகள் தோறும் தலைவர் கருணாநிதி படம் அலங்கரித்து மலர் தூவி மரியாதையை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அன்று காலை 9 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் பூங்கா அருகில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று நான்கு ரோடு அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தலைவர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தியும், தலைவர் கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் சிறப்புற நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதுசமயம் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.