கருங்கல், மே. 31: கருங்கல் அருகே பைக் மோதி படுகாயமடைந்த முன்னாள் கால்நடைத்துறை ஊழியர் இறந்தார். கருங்கல் அருகே கப்பியறை செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (63). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர்.
இவர் கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 15ம் தேதி வீட்டிலிருந்து பைக்கில் வெளியே செல்லும் போது வீட்டின் அருகாமையில் வைத்து பின்னால் வந்த பைக் மார்ட்டின் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த மார்ட்டினை நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிட்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் சிகிட்சை பலனின்றி நேற்று மார்ட்டின் இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்ட்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றவர் குறித்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.