கருங்கல், மே 31: கருங்கலில் இருந்து திங்கள்நகர் வழியாக நாகர்கோவிலுக்கு நேற்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் திங்கள்நகர் சாலையில் கருக்குபனை கிராமத்தில் உள்ள நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது பின்னால் கருங்கலில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ்சில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.
எனினும் குறைவான வேகத்தில் வந்த பஸ் நின்று கொண்டிருந்த பஸ்சின் பின் பகுதியில் மோதியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் சத்தம் போட்டனர். விபத்தில் நின்ற பஸ்சின் பின் பகுதி கண்ணாடியும், பின்னால் வந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் காயங்கள் இன்றி தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கருங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.