இந்தூர்: மத்திய பிரதேச அணியுடனான ரஞ்சி கோப்பை அரையிறுதியில், கராமி – மஜும்தார் ஜோடியின் அபார ஆட்டத்தால் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்துள்ளது. ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற பெங்கால் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் கரண் லால் 23, அபிமன்யு ஈஸ்வரன் 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். சுதிப் குமார் கராமி – அனுஸ்துப் மஜும்தார் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 241 ரன் சேர்த்தனர். மஜும்தார் 120 ரன் (206 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), கராமி 112 ரன் (213 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர்.முதல் நாள் ஆட்ட முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்துள்ளது (87 ஓவர்). கேப்டன் மனோஜ் திவாரி 5 ரன், ஷாபாஸ் அகமது 6 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ம.பி. பந்துவீச்சில் அனுபவ் அகர்வால் 2, கவுரவ், ஆவேசஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.கர்நாடகா 229/5: ரஞ்சி கோப்பை 2வது அரையிறுதியில் கர்நாடகா – சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீசியது. சமர்த் 3, படிக்கல் 9, நிகின் ஜோஸ் 18, மணிஷ் பாண்டே 7, ஷ்ரேயாஸ் கோபால் 15 ரன்னில் பெவிலியன் திரும்ப, கர்நாடகா 40.3 ஓவரில் 112 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.இந்த நிலையில், கேப்டன் மயாங்க் அகர்வால் – னிவாஸ் ஷரத் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய மயாங்க் சதம் விளாச, ஸ்ரீனிவாஸ் அரை சதம் அடித்தார். முதல் நாள் முடிவில் கர்நாடகா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்துள்ளது (87 ஓவர்). மயாங்க் 110 ரன், னிவாஸ் 58 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சவுராஷ்டிரா தரப்பில் குஷாங் 2, சகாரியா, பிரேரக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்….