பந்தலூர், அக்.18: பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கரடி தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த கரடிகளை வனத்துறை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரம் பகுதியான பந்தலூர் இன்கோ நகர், கூவமூலா, கொளப்பள்ளி, பெருங்கரை, நெல்லியாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரடி தொல்லை அதிகரித்து வருகிறது.
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பேக்டரி மட்டம் பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி சிவனேசன், சேகர் ஆகியோர் வீட்டின் சமையல் அறைக்குள் கரடி புகுந்து வீட்டு உபயோக பொருட்களை கரடி சேதம் செய்தது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தும் ஆயிலை குடித்துள்ளது. இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் சத்தமிடவும் கரடி ஓட்டம் பிடித்தது. இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.