செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் பின்புற சுற்றுச்சுவரை ஒட்டி பழமையான குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. கடந்த 30 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நீர்தேக்க தொட்டி நாளடைவில் சேதமடைந்து பொதுமக்களுக்கு பயன்படாமல் போனது. பள்ளி அருகே இந்த குடிநீர் தேக்க தொட்டி உள்ளதால் அதனை இடிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால், அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தொட்டியின் ஒருபக்க சுவர் சரிந்து விழுந்தது. மேலும் தொட்டியை சுற்றி செடி கொடிகள் வளர்ந்துள்ளதால் கொடிய விஷமுள்ள பூச்சிகள் பள்ளி வளாகத்தில் உலா வருகின்றன. இதனால், பள்ளியில் பயிலும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாட அஞ்சுகின்றனர். எனவே பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் பழுதான குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.