கம்பம், ஜூன் 4: தேனி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழாவையொட்டி, திமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில், காந்தி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரா.பாண்டியன், திமுக நகர செயலாளர்கள் வீரபாண்டியன் (வடக்கு), பால்பாண்டியராஜா (தெற்கு ) மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கம்பம் சிவனடியார் மடத்தில், கம்பம் நகர திமுக செயலாளர்கள் வீரபாண்டியன் (வ), பால்பாண்டியராஜா (தெ) ஆகியோர் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்: போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியிலுள்ள மேலசொக்கநாதபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில், போடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, போடி மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான லட்சுமணன் தலைமை தாங்கினார். மேல சொக்கநாதபுரம் பேரூர் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவு கொள்ளும் விதமாக, அவரின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போடி: போடி நகர திமுக சார்பில் தேவர் சிலை திடலில் நடைபெற்ற விழாவிற்கு நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். முன்னதாக கட்டபொம்மன் சிலையிலிருந்து காமராஜர் சாலை வழியாக தேவர் சிலை வரை திமுகவினர் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அங்கு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், பஷீர் முகமது, பரணி, துணைச் செயலாளர்கள் வெங்கடேஷ் குமார், காளிதாஸ், முன்னாள் நகர செயலாளர் செல்வராஜ், தேனி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மாயக்கண்ணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் முருகன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.