கம்பம், பிப். 2: கம்பம் பகுதியில் வெள்ளை பூண்டு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.400ஐ தொட்டது. கடந்த சில மாதங்களாக வெள்ளைப் பூண்டு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் வரை பருவமழை பெய்ததால் வெள்ளை பூண்டு விளைச்சல் இல்லாமல் விவசாயிகளை ஏமாற்றியது. சராசரியாக அக்டோபர் மாதம் வரை செய்யக்கூடிய பருவமழை கடந்த வருடம் டிசம்பர் இறுதி வரை பெய்தது.
இதனால் வெள்ளைப் பூண்டு விளையக்கூடிய மலைப் பிரதேசங்களில் வெள்ளை பூண்டு பயிரிட்ட விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வட இந்தியாவில் கடந்தாண்டு அளவுக்கு அதிகமாக மழை பொழிவு ஏற்பட்டதால், அப்பகுதியிலும் வெள்ளைப் பூண்டு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளைப் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 4 மாதங்களுக்கு பூண்டு விலை குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.