கம்பம், நவ. 22: தேனி மாவட்டத்தில் பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல் போக சாகுபடி பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. தற்போது அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் 2ம் போக சாகுபடி பணிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் நிலங்களை தரிசாக விடாமல் வயல்வெளிகளில் ஆடு மற்றும் வாத்துக்களின் கிடைகள் அமைத்து அதன் எச்சங்களை சிறந்த உரமாக்கி அதிக மகசூல் எடுக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கம்பம் வீரப்பநாயக்கன்குளம், ஊமையன் வாய்க்கால், உத்தமுத்து பாசன பரவு சின்னவாய்க்கால், உடைப்படிகுளம் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வாத்துகளுக்கு தேவையான புழு, பூச்சிகள் மற்றும் இறைகள் கிடைப்பதால் வாத்து மேய்ப்பவர்கள் கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து வாத்து மேய்ப்பவர்கள் கூறுகையில், ‘‘வாத்துக்கள் வயல்வெளிகளில் உள்ள புழு, மற்றும் பூச்சிகளை இரைகளாக உட்கொள்ளும்போது அதிக பருமனான முட்டை கொடுக்கின்றன. இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் கிடை அமைக்கப்பட்டுள்ளது.ஒரு புறம் நல்ல உரமாகவும் பயன்படுகிறது, அடுத்த அறுவடைக்கு நெல் பயிரிடும் போது அதிக மகசூல் கிடைக்கவும் வழிவகை செய்கிறது’’ என்றனர்.