கம்பம், அக். 31: கம்பம் நகரின் 14வது வார்டு செக்கடி தெருவில் உள்ளது சேனை ஓடை. இதில் கட்டிடக்கழிவுகளை பொதுமக்கள் கொட்டி வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து கம்பம் நகர கட்டிட ஆய்வாளர் நேற்று இப்பகுதியில் ஆய்வு நடத்தினார். கம்பம் கம்பமெட்டு ரோடு பகுதியில் சேனை ஓடை துவங்கி தாத்தப்பன் குளம், புது பள்ளிவாசல் தெரு, செக்கடி தெரு, ஐசக் போதகர் தெரு வழியாக வீரப்ப நாயக்கன்குளம் சென்றடைகிறது.
பொதுப்பணித் துறையினருக்கு சொந்தமான இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் கவனித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பதிநான்காவது வார்டுக்கு உட்பட்ட செக்கடி தெருவில் உள்ள சேனை ஓடை பகுதிகளில், அதிக அளவில் கட்டிடக்கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த பிரச்னையை நகர் மன்ற உறுப்பினர் அன்புக்குமாரி ஜெகன் பிரதாப் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றார்.
உடனடியாக நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் உத்தரவின் பேரில், கம்பம் நகர கட்டிட ஆய்வாளர் சலீம் இப்பகுதியில் உள்ள சேனை ஓடையை நேரில் ஆய்வு செய்தார். அங்கு கொட்டப்பட்டிருக்கும் கட்டிடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அப்பகுதியில் கட்டிடம் கட்டி வரும் கட்டிட உரிமையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.