கம்பம், மே 30: கம்பம் நகராட்சி பெண்கள் பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 2ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் கம்பம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறைகள், பள்ளி வளாகம், மாணவ-மாணவிகள் கழிப்பிடங்கள், இருக்கைகள், மேஜைகள் தூய்மை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு பணியின் போது, உடன் ஆணையாளர் உமா சங்கர், ஆரோக்கியம்மாள், சுகாதார ஆய்வாளர் அரசக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.