கம்பம்: கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி பல்புகளாக மாற்றும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது. கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 1770 தெருவிளக்குகள் உள்ளன. இவற்றை கம்பம் நகராட்சி பராமரிக்கிறது. இந்நிலையில் தெரு விளக்குகளில் உள்ள டியூப் லைட்டுகளை மாற்றி எல்இடி லைட்டுகளை பொருத்தும் பணிக்கு நேற்று பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் மற்றும் கம்பம் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநில நகர்ப்புற உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கம்பம் நகராட்சி விரிவாக்க பகுதிகளில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 500 தெரு விளக்குகள் அமைக்க அரசுக்கு கருத்துரு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறினார். பொறியாளர் அய்யனார் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், வக்கீல் துரை.நெப்போலியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.