கம்பம், ஆக.22: கம்பம் சுருளிவேலப்பர் (எ) சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறவுள்ளது. விழாவையொட்டி கடந்த 19ம் தேதி காலை விநாயகர் வழிபாடு, மஹாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கி மாலை கலசங்களில் புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு தீர்த்த கலசங்கள் மற்றும் முளைப்பாரி நகர் வலம் வந்தன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி சுருளிவேலப்பர் (எ) சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை திருக்குடத்துக்கள் எழுந்தருள் செய்தல் நிகழ்ச்சி, முதற்கால யாக பூஜைகளுடன் தொடங்கியது.
நேற்று காலை இரண்டாம் கால பூஜை, இரவு மூன்றாம் கால யாக வேள்விகள் நடைபெற்றன.இன்று நான்காம் கால யாக வேள்வி நிகழ்ச்சி, கோ பூஜை, சுமங்கலி பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பின்னர் அன்னதான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அருள்மிகு சுருளி வேலப்பர் (எ) சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருக பக்தர்கள் சபையினர் செய்துள்ளனர். பக்தர்கள் பாதுகாப்பு கருதி கம்பம் தெற்கு, வடக்கு காவல்துறையினர், கம்பம் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.