கம்பம், மே 28: கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள திராட்சை தோட்டங்களைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் முழுவதும் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி, சுமார் 3 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. இந்திய அளவில் திராட்சை உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் திராட்சை உற்பத்தியில் தேனி மாவட்டம் முதலிடத்திலும் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்தவரையில், ஆண்டுக்கு ஒருமுறை தான் திராட்சை விளையும். ஆனால் தேனி மாவட்டத்தில் மூன்று சீசன் மகசூல் எடுக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் திராட்சை விளையக்கூடிய மண்வளம், மழைவளம், சீதோஷ்ண நிலையை தமிழகத்திலேயே தேனி மாவட்டம் கம்பம் பள்ளதாக்கு பகுதி கொண்டுள்ளது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் திராட்சை விளையும் பகுதி என்ற பெருமையை கம்பம் பள்ளதாக்கு பெற்றுள்ளதால் மத்திய அரசு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.