கம்பம், ஜூலை 19: கம்பம் அரசு மருத்துவமனையில் கண்சிகிச்சை பிரிவு நவீன வசதியுடன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வந்தன. கண் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் தேனி மற்றும் மதுரை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கண் சிகிச்சை பிரிவில் பிரிவில் உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டி மணிகாரபிள்ளை தெருவைச் சேர்ந்த முத்துச்சாமி (65) மற்றும் கம்பமெட்டு காலனியைச் சேர்ந்த பாத்திமா (50) ஆகியோரை சோதனை செய்த போது கண் புரை பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்து நவீன லென்ஸ் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த கண் டாக்டர் சூர்யகுமார், செவிலியர்கள் சோனியா, எழில்அரசி, ஆபரேசன் தியேட்டர் உதவியாளர் விக்னேஷ் குழுவினரை மருத்துவமனை தலைமை டாக்டர் பொன்னரசன் பாராட்டினார். கண்புரை அகற்றப்பட்டு நவீன லென்ஸ் பொருத்தப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.