கம்பம், ஆக.28: கம்பத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கம்பம் யாதவர் மடாலய வளாகத்தில் உள்ள வேணுகோபாலகிருஷ்ணன் கோயிலில், சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது. பாலாபிஷேகத்தை முன்னிட்டு பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றன.
இதனை தொடர்ந்து யாதவ சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் பொங்கல் பானையுடன் ஊர்வலமாக சென்றனர். கம்பம் மாலையம்மாள்புரத்தில் தொடங்கி, யாதவர் தெரு, செக்கடி தெரு, போக்குவரத்து சிக்னல் வழியாக கம்பராயப் பெருமாள் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு குழந்தைகள் கிருஷ்ணன், ராதை, நரசிம்மர் வேடம் அணிந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.