கம்பம், ஆக.17: கம்பத்தில் சேதமடைந்த காந்தி சிலையின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து, சிலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. கம்பம் எல்.எப். மெயின்ரோட்டில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. சிலையின் வலது கையில் புத்தகத்தை பிடித்திருப்பது போல் இருக்கும். இந்த சிலையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி கம்பத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகேந்திரன் என்பவர், காந்தி சிலையின் வலது கையை சேதப்படுத்தினார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மகேந்திரனை கைது செய்தனர். மேலும் சேதமடைந்த சிலையை மூடி வைத்தனர்.
இந்நிலையில் சேதமடைந்த சிலையை சீரமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, நேற்று முன் தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ ஓ.ஆர்.ராமச்சந்திரன், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் காந்தி சிலையை திறந்து வைத்து, மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.