கமுதி, ஆக. 20: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முஸாபர் அவுலியா தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது. கமுதியில் பிரசித்தி பெற்ற முஸாபர் அவுலியா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கமுதி- சுந்தரபுரத்தில் உள்ள தைக்கா வீட்டில் இருந்து சந்தனக்கூடு திருவிழாவிற்கு ஏற்றப்பட வேண்டிய கொடியை கண்மாய் கரையில் உள்ள முஸாபர் அவுலியா தர்ஹாவிற்கு ஊர்வலமாக எடுத்து கொண்டு வரப்பட்டது. பின்னர் தர்ஹா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில், தர்ஹா உரிமையாளரும், பேரூராட்சி தலைவருமான, அப்துல் வஹாப் சகாராணி கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 1000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.