கமுதி, ஆக.7: கமுதி அருகே டி. வாலசுப்பிரமணியபுரத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் தமிழ்ச் செல்வி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டி.வாலசுப்ரமணியபுரம், பாப்புரெட்டியாபட்டி, திம்மநாதபுரம், மாவிலங்கை, பம்மனேந்தல் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். முகாமில் இலவச வீடு, இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம், வேளாண்மை தொடர்பான விண்ணப்பம் என 204 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த முகாமில் ஊராட்சி தலைவர்கள் மாரிச்சாமி, முத்துமாரி, திம்மக்காள், பொன்னுச்சாமி, சசிகலா மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமலோர்பவ ஜெயராணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக் மற்றும் ஊராட்சி செயலர்கள் முத்துராமலிங்கம், குருமூர்த்தி,சிவக்குமார், சக்திவேல், காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.