கமுதி, ஜூலை 5: கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதையில்லா சமுதாயம் வேண்டும் என்ற உயரிய நோக்கோடு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் உறுதிமொழி எடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மேரிசுஜின் அனைவரையும் வரவேற்று பேசினார். போதை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் முகம்மது அசாருதீன் விளக்கவுரை அளித்தார். முதல்வர் முனைவர் தர்மர் தலைமை வைத்தார். சிறப்பு விருந்தினராக கமுதி சார்பு ஆய்வாளர் கௌதம் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் போதையின் தீமை, சுய ஒழுக்கம், போதையில்லா சமுதாயம் படைப்பதில் இளைஞர்களின் பங்கு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.