திருமங்கலம், மே 27: கப்பலூர் டோல்கேட்டினை அகற்ற வேண்டும் என, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் திருமங்கலம் கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், திருமங்கலம் கோட்ட மாநாடு நடைபெற்றது. மாநில பொருளாளர் மகாலிங்கம் துவக்கவுரையாற்றினார். கோட்டச்செயலாளர் ராஜேந்திரன் செயல் அறிக்கை வாசித்தார். கோட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் வரவேற்றார். இதில் ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கப்பலூர் டோல்கேட்டினை அகற்ற ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். திருமங்கலம் நகரில் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமங்கலம் நகரில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் தினகரன்சாமி, மாவட்ட தலைவர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.