கன்னியாகுமரி, ஜூலை 22: கன்னியாகுமரி அருகே பூட்டிய வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். கன்னியாகுமரி அருகே காரைக்காரமடம் பகுதியில் சந்தை உள்ளது. இதன் எதிரில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கம். கோபி கன்னியாகுமரியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி உட்பட பல கோயில்களில் தரிசனம் செய்ய வெளியூர் சென்று விட்டனர். கோபி தனது வீட்டில் புறாக்களை வளர்த்து வருகிறார். அவற்றுக்கு உணவிட பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் வளர்க்கப்படும் புறாக்களுக்கு பக்கத்து வீட்டை ேசர்ந்த பெண் உணவிட வந்தார். அப்போது கோபி வீட்டு பின்புற கதவு திறந்த நிலையில் காணப்பட்டது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் பீரோ உடைக்கப்பட்ட நிலையில் பொருட்கள் சிதறி கிடந்தன.
இதையடுத்து கோபியை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், வீட்டில் இருந்த பொருட்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது பீரோவில் இருந்த ₹48 ஆயிரத்து 500 மற்றும் 3.5 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. பீரோவில் கவரிங் நகை மற்றும் தங்க நகைகளை சேர்த்தே வைத்துள்ளனர். ஆனால் திருடர்கள் தங்க நகையை மட்டும் எடுத்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு ெசய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.