கன்னியாகுமரி, ஆக.29: தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை சுகாதார பணி மேற்பார்வையாளர் சங்க 12வது மாநில மாநாடு கன்னியாகுமரி பெரியார் நகரில் உள்ள பீட்டர் சிஎஸ்ஐ சர்ச் கலையரங்கத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். அவைத் தலைவர் தரணி ராஜன், பொதுச்செயலாளர் கனி, பொருளாளர் சங்கர், துணைத்தலைவர் பிரபாகரன், செயல் தலைவர் னிவாசன், கன்னியாகுமரி பேரூராட்சி சுகாதார அலுவலர் முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகராட்சி, பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றியமைக்க அரசை வலியுறுத்துவது, சுகாதார மேற்பார்வையாளர்களின் விருப்பத்தின் பேரில் பணியிடமாற்றம் செய்ய அரசை கேட்டுக் கொள்வது, சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு 20 வருடம் பணி மூப்பின் அடிப்படையில் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.