புழல், ஜூலை 4: புழல் அடுத்த கதிர்வேடு பிரிட்டானியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (46). இவரது, கணவர் ஜெகதீசன் ஓசூரில் உள்ள பிரபல கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கவிதாவின் தம்பி பாலாஜி மாதவரம் ரவுண்டானா வி.எஸ்.மணி நகர் அருகில் பட்டறை கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் கவிதா, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கம்பெனிக்குச் சென்று தனது தம்பியை சந்தித்து பேசிவிட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, மாதவரம் ரவுண்டானவில் இருந்து செங்குன்றம் செல்லும் வழியில் புழல் அடுத்த ரெட்டை ஏரி அருகே பின்னால் வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டுப் பகுதியில் இடித்துள்ளது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா, எழுந்து சுதாதரிப்பதற்குள் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுகிலா, வழக்குபதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் மணிசிங் (35) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.