விருதுநகர், மே 20: பாதியில் நிற்கும் குடியிருப்புகளை முழுமையாக கட்டித்தர கோரி கலெக்டர் அலுவலகத்தில் மொட்டமலை மக்கள் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சி நிர்வாகி பொன்னுச்சாமி தலைமையில் மொட்டமலையில் வசிக்கும் மக்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலையில் ஒரு சமூகத்தை சேர்ந்த சுமார் 7 குடும்பங்கள் உட்பட 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் திருவிழாக்களில் கிராமங்களுக்கு சென்று 4 நாட்கள் தங்கியிருந்து பிளாஸ்டிக் பொம்மைகள், சீப்பு, திருஷ்டி கயிறு விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் கடந்த 2010-14ல் மொட்டமலை அருகே இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டது. அதில் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இந்நிலையில் கலைஞர் கனவு இல்லத்தில் குடியிருப்பு கட்ட மனு அளித்ததை தொடர்ந்து 11 பேருக்கு வீடு கட்ட அனுமதி 2024-25ல் வழங்கப்பட்டது. கலைஞர் கனவு இல்ல அனுமதியில் 11 வீடுகளை கட்டி வருகிறோம். இதுவரை 3 தவணை பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு கட்டுமான பணிகள் பாதி நிறைவுற்றுள்ளது. மேற்கொண்டு கட்டிடத்தை எழுப்ப பண வசதியில்லை. வங்கியில் பணம் கேட்டால் தர மறுக்கின்றனர்.
குழந்தைகளை வீட்டில் விட்டு சென்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழல் உள்ள நிலையில், பள்ளிக்கு அனுப்பும் கஷ்டமான சூழல் உள்ளது. கலெக்டர் தலையிட்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4வது தவணை தொகையை முன்கூட்டி வழங்கிட வேண்டும். தேவைக்கு வங்கியில் கடனுதவி அளிக்க வேண்டும் அல்லது ஆதிதிராவிடர் துறை மூலம் பாதியில் நிற்கும் கலைஞர் கனவு இல்ல 11 குடியிருப்புகளை கட்டித்தர பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.