செய்யாறு, மே 9: செய்யாறு அருகே கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால், விவசாய நிலங்களில் 7 மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, சித்தாத்தூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின் வழித்தடத்தில் வரிசையாக உள்ள 7 கம்பங்கள் விவசாய நிலங்களில் சாய்ந்து விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த அப்துல்லாபுரம் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் உடனடியாக அந்த வழித்தடத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு மின்கம்பங்களை சீரமைக்கவில்லையாம்.
இதனால், விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பங்கள் கடந்த 3 ஆண்டுகளாக அப்படியேதான் கிடக்கிறது. 7 மின்கம்பங்கள் முற்றிலும் சாய்ந்து விழுந்ததால் மீதமுள்ள கம்பங்களில் செல்லும் ஒயர்களும் மிகவும் தாழ்ந்துபோய் உள்ளது. எனவே, வயலின் நடுவே சாய்ந்த மின்கம்பங்களாலும், ஒயர்களாலும் பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் ஒயர்களை துண்டித்து எடுத்துவிட்டு, நடவு பணி மேற்கொண்டு வருகின்றனர். மற்ற விவசாயிகள் ஒயர்களை தூக்கிப்பிடித்து உழுவதும், நடவு செய்வதும், பின்னர் அறுவடை செய்தும் வருவதால் காலவிரயம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும், அங்குள்ள மின்மாற்றியை தாங்கியுள்ள 2 மின்கம்பங்களில் சிமென்ட் கலவைகள் பெயர்ந்தும், உதிர்ந்து போயும் எலும்புக்கூடாய் கம்பிகள் மட்டுமே காட்சியளிக்கிறது. இதனால் மின்மாற்றியில் இருந்து செல்லும் ஒயர்களின் மீது சிறிய மரக்கிளைகள் உடைந்து விழுந்தாலே, அந்த பாரத்தில் அடியோடு சாயக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி, சித்தாத்தூர் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளாக விவசாய நிலத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை உடனே சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்துல்லாபுரம் மின்பகிர்மான அலுவலக அதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இதுகுறித்த புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டொரு நாட்களில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.