திருத்தணி, ஜூன் 25: கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் பெண்களை தாக்கியதாக தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட போலீஸ் எஸ்பி அதிரடி உத்தரவிட்டுள்ளார். திருத்தணி அருகே கனகம்மாசத்திரத்தில் மதுமிதா (36), செவ்வந்தி (25), தனம் (28) ஆகிய 3 பெண்கள் வாடகை வீட்டில் 5 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மதுமிதா என்பவர் தனக்கு தொல்லை கொடுப்பதாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு அருண் என்பவர் புகார் அளித்தார்.
இதையடுத்து மதுமிதா தனது தோழிகள் 3 பேருடன் காவல் நிலையம் வந்து புகார் கொடுக்க வந்த அருண், அவரது நண்பர் சிவாஜி ஆகியோரிடம் ஆபாசமாக பேசி காவல் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பெண்கள் கொச்சைப்படுத்தி பேசியதாகவும், இதனால் தலைமைக் காவலர் ராமன் மதுமிதாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் பெண்களை காவல் நிலையத்தில் வைத்து தலைமை காவலர் தாக்கியதாக கூறப்படும் 8 வினாடிகள் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. இதனையடுத்து தலைமை காவலர் ராமனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் எஸ்.பி சீனிவாச பெருமாள் நேற்று உத்தரவிட்டார்.
இதுகுறித்து திருத்தணி டிஎஸ்பி கந்தன் கூறுகையில், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில், மதுமிதா மீது அருண் என்பவர் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். காவல் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதியாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பெண்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.