திருத்தணி: கனகம்மாசத்திரம் அருகே, சொத்தை அபகரிக்க வேண்டி மாமியாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய மருமகள் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. அவரது மனைவி ஜெகதாம்மா(60). இவரது மகன் முனிவேல்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தைச் சேர்ந்த ஜான்சி ராணி(38) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு பூனிமாங்காட்டில் உள்ள அவரது வீட்டில் வசித்து வருகின்றனர். ஜெகதாம்மா பெயரில் உள்ள அவர்களின் பூர்வீக சொத்தை தனது பெயரில் மாற்றி எழுதி தர வேண்டும் என்று மருமகள் ஜான்சிராணி அத்தையை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சொத்து பெயர் மாற்றி எழுதி தர ஜெகதாம்மாக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜான்சிராணி உறவினர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன், லோகநாதன் ஆகியோர் பூனிமாங்காடு வந்து ஜெகதாம்மா வீட்டில் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை ஜெகதம்மா வீட்டில் தனியாக இருந்தபோது அவர் இருந்த அறையில் அத்துமீறி நுழைந்த சீனிவாசன் டிவி சத்தத்தை அதிகப்படியாக வைத்து அருகில் இருந்த கயிற்றினை எடுத்து கழுத்தில் இறுக்கி நெறித்து கொலை செய்ய முயன்ற போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வருவதற்குள் சீனிவாசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொலை முயற்சி குறித்து மருமகளிடம் சொல்லவே அதற்கு நான் தான் உன்னை கொலை செய்ய சொன்னேன். நீ செத்துப் போனால்தான் சொத்து எனக்கு வரும் என்று கூறியதால், அதிர்ச்சி அடைந்த மூதாட்டி அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, ஜெகதாம்மா 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாக ஜெகதாம்மா அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து அத்தையை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய மருமகள் ஜான்சிராணி, அவரது உறவினர் சீனிவாசன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சொத்தை அபகரிக்க மாமியாரை மருமகள் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.