கந்தர்வகோட்டை, மே 23: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நகருக்கு தினசரி 36 ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் சொந்த அலுவல் காரணமாக தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் போன்ற அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் அரசு பள்ளிகளுக்கு பெரும் பான்மையோர் வந்து செல்கிறார்கள்.
இவ்வாறு மக்கள் நெருக்கடி உள்ள ஊரில் பொதுக் கழிப்பிடங்கள் இல்லாததால் ஆண்களும், பெண்களும் இயற்கை உபாதை கழிக்க சிரமம் ஏற்படுகிறது. எனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நியாய விலை கடை, கிராம நிர்வாக அலுவலகம், கால்நடை மருத்துவமனை, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் போன்ற அரசு அலுவலகங்கள் அருகில் உள்ள சுகாதார வளாகத்தை உடனே சீர் செய்து மக்கள் பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.