கந்தர்வகோட்டை, ஆக.3: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள கல்லூரியில் நிர்வாகத்தினர் மாசு அற்ற மரங்களை வளர்ந்து வேண்டும் என்கின்ற நல்லெண்ணத்தில் மாணவ-மாணவிகளின் தாயார் பெயரில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் தன்னார்வத்துடன் அவரவர் தாயின் பெயரில் மாமரம், பலாமரம், தென்னை மரம், கொய்யா மரம், நெல்லிமரம் போன்ற மக்களுக்குப் பயன் தரக்கூடிய மரங்களை நடவு செய்தனர். பூமி தாய்க்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத மரம் வளர்ப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெயபால் தலைமை வகித்தார். அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் செல்வகுமார் செய்திருந்தார்.