வேலூர், மே 26: தெருவில் நின்றபடி கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி ரீல்ஸ் வெளியிட்ட வேலூர் புள்ளீங்கோ 3 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர். வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த 3 இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சலவன்பேட்டை திருவிக சாலையில் நின்று கொண்டு கத்தியை காட்டியபடி பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி பரவியை ‘புள்ளீங்கோ’வின் ரீல்ஸை கண்ட பலரும் போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்பி மதிவாணன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு ஓல்டு டவுனை சேர்ந்த 16, 22, 23 வயது கொண்ட 3 பேரை பிடித்து தெற்கு போலீஸ் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரீல்ஸ் வெளியிட்ட 22, 23 வயது வாலிபர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயதுடைய சிறுவனை சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.