ஆரணி, ஆக.4: ஆரணி அருகே நள்ளிரவில் கணவன் கண் முன்னே கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம் 5 சவரன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த மருசூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார்(74), விவசாயி. இவரது மனைவி, சந்திரா(69). இவர்களுக்கு சண்முகம், சங்கர் ஆகிய மகன்கள் உள்ளனர். அதில், சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும், சங்கர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இதனால், சாந்தகுமார் அவரது மனைவியுடன் மருசூர் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாந்தகுமார் அவரது மனைவியும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு, வீட்டின் பின்புறம் கொசு வலை அமைத்த கதவை மட்டும் மூடிவிட்டு, மற்றொரு கதவை பூட்டாமல் தூங்கியுள்ளனர். அப்போது, நள்ளிரவு 2 மர்ம ஆசாமிகள் முகமூடி அணிந்த படி, சாந்தகுமார் வீட்டின் பின்புற நுழைந்து கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, தூங்கிக் கொண்டிருந்த சாந்தகுமாரின் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த தாலிசெயினை கழற்ற முயன்றுள்ளனர். அப்போது, அதிர்ச்சியுடன் எழுந்த சந்திரா தாலி செயினை விடாமல் பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டதும் வீட்டின் மற்றொரு அறையில் படுத்திருந்த அவரது கணவர் எழுந்து ஓடிவந்து பார்த்தபோது, முகமூடி ஆசாமிகள் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர்களிடம் இருந்து மனைவியை காப்பாற்ற முயன்றபோது, அந்த மர்ம ஆசாமிகள் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, சந்திராவின் கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிசெயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். அதில், ஒருவரை சாந்தகுமார் பிடிக்க முயன்றபோது, அருகில் இருந்த கட்டையால் தாக்கிவிட்டு இருவரும் தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், எஸ்ஐ அருண்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சாந்தகுமார் நேற்று ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். நள்ளிரவில் கணவன் கண்முன்னே காத்தியை காட்டி மிரட்டி மனைவியின் தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.