வந்தவாசி, பிப் 22: வந்தவாசி அடுத்த காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன்(56) விவசாயி. இவர் நேற்று முன்தினம் கீழ்நர்மா கிராமத்தில் உறவினர் ஒருவர் துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது கிராமத்திற்கு செல்ல கீழ்கொடுங்காலூர் நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கீழ்கொடுங்காலூர் கிராமத்திற்கு செல்வதாகவும், உங்களை அங்கு இறக்கி விடுவதாக கூறி பைக்கில் அமர வைத்தனர். சற்று தூரம் சென்றதும் மறைவிடத்தில் பைக்கை நிறுத்திவிட்டு முட்புதருக்கு அழைத்துச் சென்ற வாலிபர்கள் கத்தியை காட்டி பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுக்கும்படி கூறினர்.
ரகோத்தமன் பணம் தர மறுத்ததால் அப்போது கத்தியால் குத்தி விடுவோம் என மிரட்டினார்களாம். தொடர்ந்து பாக்கெட்டில் இருந்த ₹2000 பணத்தை பறித்துக் கொண்டு இரண்டு வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இதுகுறித்து ரகோத்தமன் நேற்று கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்களை கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.