பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே கத்தியுடன் ரகளை செய்து போலீசாருக்கு தண்ணி காட்டிய போதை வாலிபர் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். பெரியபாளையம் அருகே ராள்ளப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் மதுபோதையில் ஒரு வாலிபர் கையில் கட்டை மற்றும் கத்தியுடன் வாகனங்களை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் நடந்து வந்த பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்ததும் பெரியபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அந்த போதை வாலிபரை போலீசார் பிடிக்க முயன்றபோது, அவர் கத்தியை சரமாரி வீசி போலீசாரிடமும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். பின்னர், அங்குள்ள கட்டிடத்தின்மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்தார். மேலும், அங்குள்ள முட்புதர்களில் ஒளிந்துகொண்டு போலீசாரிடம் சிக்காமல் போதை வாலிபர் ஆட்டம் காட்டினார். பின்னர் அந்த போதை வாலிபரிடம் போலீசார் நைசாக பேச்சு கொடுத்தும், அவர் தப்பிச் செல்ல முயற்சித்தார்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த போதை வாலிபரை போலீசார் அலேக்காக சுற்றி வளைத்து தூக்கினர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர் ராள்ளபாடி பகுதியைச் சேர்ந்த ராஜா (22) என்பது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து 5 பிரிவுகளின்கீழ் பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.