குமரியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய் நார் கட்டிகள்விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பது மட்டும் லாபம் தந்து விடாது. சிலநேரங்களில் விளை பொருட்களின் விலை குறைந்து விட்டால், விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நஷ்டமே ஏற்படும். இதனை சமாளிக்க மாற்று வழியினை விவசாயிகள் கையில் எடுத்தே ஆக வேண்டும். அந்த மாற்று வழிதான் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது. எந்த ஒரு விளைபொருளையும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதனால், விவசாயிகளுக்கு லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். தென்னை மரங்களில் இருந்து பெறப்படும் தேங்காயை விற்பனை செய்த பிறகு, அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நார், கழிவுகளை மதிப்புக் கூட்டினால், தென்னை விவசாயிகள் இன்னும் லாபம் பெறலாம். குமரி மாவட்டத்தில் விவசாயத்தில் தென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சுமார் 24 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்படும் தேங்காய் குமரி மாவட்ட மக்களுக்கு பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள தேங்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் உற்பத்தி ஆகும் தேங்காய்களில் ஈத்தாமொழி தேங்காய்க்கு தனி மதிப்பு உண்டு. தேங்காய்ப் பூவின் அடர்த்தி, எண்ணெய்ச் சத்து அதிகமாக இருக்கும். அடி முதல் நுனிவரை பனையில் பயன் கிடைத்து வருகிறது. அதேபோன்றுதான் தென்னையிலும் பயன் கிடைத்து வருகிறது. தென்னை இளநீர், தேங்காய், ஓலை, ஈர்க்கு என அனைத்து பொருட்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் தென்னை உற்பத்தி அதிகமாக இருப்பதால் தேங்காய் கதம்பை(மட்டை)யில் இருந்து கயிறு, மிதியடிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கதம்பையில் இருந்து நார் எடுத்த பிறகு கிடைக்கும் கதம்பைக் கழிவுகள் மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் கதம்பைக் கழிவில் இருந்து அதிக வருமானத்தை குமரி வியாபாரிகள் பார்த்து வருகின்றனர். இந்த தொழிலில் குமரி மாவட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள நங்கூரான்பிலாவிளையை சேர்ந்த சிஎல்ஆர்.லிங்கராஜா என்பவர் கதம்பைக் கழிவுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்த தொழில் குறித்து அவர் கூறியதாவது: “குமரியின் ஈத்தாமொழி தேங்காய்க்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தேங்காய்க் கதம்பையில் இருந்து கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் கடலோர கிராமத்தை ஒட்டி பல உள்ளன. விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கதம்பைகளை வாங்கி வந்து அதனை நீரில் ஊறவைத்து, பின்பு இயந்திரங்கள் மூலம் கதம்பையில் இருந்து நார் பிரிக்கப்பட்டு கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது. கதம்பையில் இருந்து நார் எடுத்தபிறகு கதம்பைக் கழிவு கிடைக்கும். இதனை கடந்த காலங் களில் தென்னந்தோப்புகளில் விவசாயிகள் உரமாக பயன்படுத்தினர். ஆலையில் இருந்து இந்த கழிவுகளை எடுத்துச்செல்ல ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு ஒரு லாரி கதம்பைக் கழிவு எடுத்துச்சென்றால் ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து வந்தனர். எப்படியாவது ஆலையில் இருந்து கதம்பைக் கழிவுகளை மாற்றினால் போதும் என உரிமையாளர்கள் நினைத்தனர். தற்போது அந்த கதம்பைக் கழிவு உலக அளவில் நல்ல வர்த்தகத்தை பிடித்துள்ளது.விவசாயத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உற்பத்தி அதிகம் பெருக்கப்பட்டு வருகிறது. இதனால் கழிவு என நினைக்கும் பொருள் சில நேரங்களில் விலைமதிப்பு மிக்க பயனுள்ள பொருளாக மாறும். அதே போன்றுதான் கதம்பைக் கழிவும் மாறியுள்ளது. கடந்த காலங்களில் தென்னந்தோப்புகளில் கதம்பைக் கழிவுகள் போடப்பட்டு வந்தது. இதனால் மழைக்காலங்களில் பெய்யும் நீரை இந்த கதம்பைக் கழிவுகள் உறிஞ்சு எடுத்துக்கொண்டு, தென்னந்தோப்பை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இதே தொழில்நுட்பத்தில் கதம்பை கழிவுகளை கொண்டு வெளிநாடுகளில் விவசாயம் செய்வதற்கு பயன்படுத்திவருகின்றனர். தொட்டியில் இந்த கதம்பைக் கழிவை போட்டு அதில் செடியை நட்டு தண்ணீரை ஊற்றும்போது சில நாட்கள் அந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றதேவையில்லை. நாம் ஊற்றிய தண்ணீர் அந்த கதம்பைக் கழிவில் இருக்கும். இதனால் வெளிநாடுகளில் இந்த கதம்பைக் கழிவுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி, மேலகிருஷ்ணன்புதூர், நங்கூரான்பிலாவிளை உள்பட பல்வேறு இடங்களில் கதம்பைக் கழிவுகளை மதிப்புக்கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஆலைகள் சுமார் 25 உள்ளன.நான் 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். கடந்த 10 வருடத்திற்கு முன்பு கதம்பைக் கழிவுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்தேன். இந்த ஆலையில் கதம்பைக் கழிவுகளில் உள்ள மண்ணை அகற்றிவிட்டு, அதனை 5 கிலோ பிஸ்கட் கட்டிபோன்று தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்பப்படுகிறது. கதம்பைக் கழிவில் இருந்து பிஸ்கட் வடிவிலான கட்டிகளாக தயாரிப்பது அனைத்தும் இயந்திரங்கள் பார்த்துக்கொள்ளும். அதனை இயக்குவது, பிஸ்கட் கட்டியாக வரும் கதம்பைக் கழிவுகளை மாற்றி வைப்பது உள்ளிட்ட வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இதற்காக 60 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கதம்பையில் இருந்து நார் பிரிக்கும் ஆலையும் இருப்பதால் இந்த தொழிலாளர்கள் தேவையாக உள்ளது. கதம்பையில் இருந்து முதலில் நார் பிரித்து எடுக்கப்படுகிறது. இந்த நாரைக் கொண்டு கயிறு, சவுட்டு மெத்தை உள்பட பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 10 டன் கதம்பையில் இருந்து 1450 கிலோ கதம்பைக் கழிவு கிடைக்கும். கதம்பைக் கழிவுகள் பிஸ்கட் வடிவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு தூத்துக்குடி, கொச்சி வழியாக கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வாரத்திற்கு 45 டன் கதம்பைக் கழிவுகள் எனது ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. பிஸ்கட் வடிவில் இருக்கும் ஒரு கட்டி கதம்பைக் கழிவு 5 கிலோ எடையில் இருக்கும். ஒரு கிலோ ரூ.14க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்பு கிலோ ரூ.27க்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. குமரியில் இருந்து இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு நான் ஏற்றுமதி செய்து வருகிறேன். நம் மாவட்டத்தில் கார்டன் அமைத்து இருப்பவர்களும் வாங்கிச்செல்கின்றனர். மாதத்திற்கு கதம்பைக் கழிவு ஏற்றுமதி தொழிலால் ரூ.30 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. மின்கட்டணம், தொழிலாளர் ஊதியம் என அனைத்துச் செலவுகளை போக லாபம் ரூ.6 லட்சம் வரை கிடைக்கும். தொடர்பு. லிங்கராஜா: 94888 10303. 45 லிட்டர் தண்ணீர்5 கிலோ கதம்பை கழிவு கட்டியின் பயன்பாடு 6 மாதகாலம்தான். இதனை வெளிநாட்டில் உள்ளவர்கள் தொட்டிகளில் இந்த கதம்பை கழிவுகளை போட்டு செடிகள் நடவு செய்கின்றனர். 6 மாதத்திற்கு பிறகு தொட்டியில் உள்ள கதம்பை கழிவுகளை மாற்றிவிட்டு புதிதாக கதம்பை கழிவு கட்டியை போடவேண்டும். 5 கிலோ கதம்பை கழிவு கட்டி ஒரு நேரத்தில் 45 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வைக்கும் ஆற்றல் கொண்டது. செடி நடவு செய்து கதம்பை கழிவு கட்டியில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் தண்ணீர் விட்டால் போதுமானது. இதனால் தண்ணீர் பயன்பாடு அதிக அளவு குறையும் என சி.எல்.ஆர் லிங்கராஜா தெரிவித்தார்….