கோபால்பட்டி, ஜூலை 9: சாணார்பட்டி அருகே திம்மனநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியில் உள்ள மாங்குளம் கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் மீன்படி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் கண்மாய் நிரம்பியது. விவசாயத்திற்கு நீரை பயன்படுத்தியதால் கண்மாய் வற்றியதை தொடர்ந்து நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக கண்மாய் அருகிலுள்ள கருப்புசாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.
பின்னர் மீன்பிடி திருவிழா துவங்கியதும் தி.பள்ளபட்டி, மணியக்காரன்பட்டி, டி.ராமரானபுரம், வேட்டைக்காரன் புதூர், திம்மனநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என ஏராளமானோர் கண்மாய்க்குள் இறங்கி ஒற்றுமையாக மீன்களை பிடித்தனர். ஊத்தா கூடை, கச்சாவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு கட்லா, ஜிலேபி, விரால், கெளுத்தி போன்ற மீன்களை பிடித்தனர். பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக கிடைத்த மீன்களுடன் வீடுகளுக்கு சென்றனர்.