நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவத்தில் லேசர் ஏன்? எதற்கு? எப்படி?“நான் சின்ன வயசுலயே லேசர் பண்ணியிருக்கேன் டாக்டர். இப்ப திரும்பியும் பண்ணணும்னு சொல்றாங்க. ஏன்?” என்றார் என்னிடம் ஆலோசனைக்கு வந்த 42 வயது நிரம்பிய பெண்மணி. இருபது வருடங்களுக்கு முன்னால் அவருடைய 22வது வயதில் அவருக்கு லேசிக் (LASIK) சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவரைப் பரிசோதித்துப் பார்த்ததில் தற்போது அவருக்குத் தேவைப்படுவது வேறு விதமான லேசர் என்று புரிந்தது.‘‘22 வயதில் செய்யப்பட்டது கண்ணாடியைத் தவிர்ப்பதற்கான சிகிச்சை. அதில் லேசர் கதிர்களை பயன்படுத்தி கருவிழியின் கனத்தில் மாற்றம் செய்திருப்பார்கள். இப்போது உங்கள் கண்ணின் உள்ளே சுரக்கும் அக்வஸ் திரவம் வெளியேறும் பாதை சுருங்கியிருக்கிறது. அக்வஸ் திரவம் உள்ளேயே தங்கி, கண்ணழுத்த நோயை உருவாக்கும் அபாயம் தெரிகிறது. எனவே அந்த திரவம் வெளியே செல்லும் விதமாக கருவிழிக்குப் பின்பகுதியில், அதாவது கிருஷ்ண படலத்தின் ஓரத்தில் ஒரு துளையை புதிதாக ஏற்படுத்த வேண்டும். இதற்கு Nd YAG (Neodymium -doped Yttrium aluminium garnet) LASER என்ற வேறு ஒரு லேசர் பயன்படுத்தப்படும்” என்று கூறி அதைப் புகைப்படங்கள் மூலமாக விளக்கினேன். இதே Nd YAG லேசர் கருவி மூலமாக YAG capaulotomy என்ற சிகிச்சையும் செய்யப்படுகிறது. கண்புரை அறுவை சிகிச்சை செய்து செயற்கை லென்ஸ் பொருத்திய பின், அந்த லென்ஸுக்குப் பின்புறத்தில் சிலருக்கு ஒட்டடை போல ஒரு மெல்லிய படலம் உருவாகக்கூடும். இந்தப் படலத்தை லேசர் கதிரின் மூலம் உடைப்பதே capsulotomy சிகிச்சை.இந்தப் பெண்மணியுடன் வந்த அவரது கணவர், ‘‘எங்க அப்பாவுக்கு சுகர் அதிகமாகி நரம்பு பாதிப்பு இருக்குது. அதுக்கு லேசர் பண்ணணும்னு சொன்னாங்களே? அதுவும் இதே மாதிரியா?” என்று கேட்டார்.இல்லை. அது முற்றிலும் வேறான இன்னொரு வகை. சர்க்கரை நோயின் காரணமாக விழித்திரையில் ரத்தக் கசிவுகள் தோன்றி விட்டால், பார்வை முழுவதுமாகப் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் இரத்தக்கசிவுகளை ஆரம்ப கட்டத்துடன் நிறுத்துவதற்காக விழித்திரையில் ஆங்காங்கே லேசர் கதிர்களால் சிறிய புள்ளிகள் அமைத்து, தடுப்புச் சுவர்கள் போன்று ஏற்படுத்துவார்கள். அதற்கு பயன்படுத்தும் லேசர், ஆர்கான் க்ரீன் லேசர் வகையைச் சார்ந்தது. சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாமல் இருக்கும் எவருக்கும் பின்னாளில் அந்த லேசரை பயன்படுத்த வேண்டியது வரலாம். விழித்திரையை நான்கு பகுதிகளாக (quadrants) பிரித்து இரண்டு முதல் நான்கு தவணைகளாக, ரத்த நாளங்களின் பக்கவாட்டில் லேசர் கதிர்களால் சிறு சிறு புள்ளிகள் வைப்பார்கள். கிட்டத்தட்ட விழித்திரையின் முழுப் பகுதியிலும் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு Panretinal photocoagulation என்று பெயர். போதுமான அளவிற்கு லேசர் கதிர்கள் வைத்திருக்கிறோமா, லேசர் புள்ளிகளுக்கு இடையிலான இடங்களில் ரத்த நாளங்கள் எதுவும் வளர்கின்றனவா என்பதையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கவனிக்க வேண்டியது அவசியம். சர்க்கரை நோயால் விழித்திரை பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் பலர் லேசர் சிகிச்சை செய்து கொண்டபின் ஆயுள் முழுமைக்கும் நல்ல பார்வையுடன் நலமாக இருக்கின்றனர். இது சர்க்கரை நோயாளிகளுக்காக வெளி நோயாளி பிரிவில் வைத்து slit lamp மூலமாக செய்யப்படும் சிகிச்சை. இறுதிக்கட்ட விழித்திரை பாதிப்பிற்காக (advanced diabetic eye disease) அறுவை சிகிச்சை செய்யும்பொழுது நேரடியாகவே விழித்திரையின் குறிப்பிட்ட இடங்களில் கருவிகள் (probes) மூலமாக லேசர் சிகிச்சை செய்யப்படுவதுண்டு. அதற்கு endo photocoagulation என்று பெயர். விழித்திரையில் ஏற்படும் central retinal vein occlusion போன்ற ரத்த நாள அடைப்புகளுக்கும் லேசர் சிகிச்சை தேவைப்படுகிறது. பதற்றம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் அவதிப்படும் நடுத்தர வயதினருக்கு, குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனை central serous retinopathy. விழித்திரையின் ஏதாவது ஒரு ரத்தநாளத்தில் இருந்து, ஒருவகை நீர் விழித்திரை அடுக்குகளின் ஊடாகக் கசிவதால், இந்த நோயில் பார்வை வட்டத்தின் நடுப்பகுதி கலங்கலாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்த விழித்திரை பிரச்சனை ஏற்பட்டால் spot laser என்ற சிகிச்சை பயனுடையதாக இருக்கும். தூரப்பார்வை குறைபாடு உடையவர்கள் சிலருக்கு, விழித்திரையின் ஓரத்தில் ஓட்டை (retinal hole) இருக்கிறது என்று கூறியிருப்பார்கள். அது பெரிதாகாமல் தடுப்பதற்காக லேசர் செய்ய வேண்டும் என்று அறிவுரை சொன்னதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இத்தகைய நோயாளிகளுக்கு indirect ophthalmoscope என்ற கருவி மூலமாக லேசர் கதிர்கள் செலுத்தப்பட்டு ஓட்டையின் ஓரங்கள் முத்திரையிட்டது போல் அடைக்கப்படும். ‘கண்ணுக்குள்ள போய் கரண்ட் வச்சா கஷ்டம் இல்லையா?’ என்று பலருக்கும் வரும் சந்தேகம் மேலே குறிப்பிட்ட வருக்கும் வந்தது. நவீன மருத்துவம் எத்தனையோ நோய்களுக்குப் பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி சிகிச்சையளித்து வருகிறது. லேசர் அப்படிப்பட்ட ஒன்று. லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பின், பச்சிளம் குழந்தை முதல் முதியவர் வரை பலருக்கு பார்வை காப்பாற்றப்பட்டிருக்கிறது. குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை அடிக்கடி கண் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கென்று சில தனிப்பட்ட உடல் உபாதைகள் வரக்கூடும். அதில் ஒன்று retinopathy of prematurity. கருவில் முழுமையான வளர்ச்சி அடைவதற்கு முன்பு பிரசவம் நிகழ்ந்துவிடுவதால் கண்ணின் விழித்திரையின் ரத்த நாளங்கள் முழுவதுமாக வளர்ச்சி அடைந்திருக்காது. அரைகுறையான வளர்ச்சியுடன் இருக்கும் ரத்த நாளங்கள், குழந்தை பிறந்த பின்பு வலுவற்றவையாகவும் பயனற்றவையாகவும் இருக்கும். அந்த வலுவற்ற ரத்தநாளங்களின் மேல் Diode red லேசர் கதிர்கள் மூலம் சிகிச்சை செய்தால், அவை பின் கட்டுப்பாடின்றி வளர்ந்து முழு விழித்திரையையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்கலாம். இதன் மூலம் குழந்தையின் பார்வை காப்பாற்றப்படும். இந்தப் பிரச்சனைக்கும் லேசர் ஒரு வரப்பிரசாதம்.முதலில் கூறிய தம்பதியர் விடைபெறும் முன் அவர்களிடம் இன்னொரு விஷயம் கூற வேண்டியிருந்தது. ‘இப்பொழுது கண் அழுத்தத்திற்காக உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் லேசர் சிகிச்சை அத்தியாவசியமானது. உங்கள் பார்வையைக் காப்பாற்றக் கூடியது. இப்போது நீங்கள் இதைச் செய்ய தவறினால் பின்னால் கண்ணழுத்த நோயால் பார்வையிழப்பு ஏற்படும். அதே சமயம், நீங்கள் ஏற்கனவே செய்துகொண்ட லேசிக் சிகிச்சை அப்படியானது அல்ல. அது முழுக்க முழுக்க அழகியலுக்கான (cosmetic) ஒன்று. கண்ணாடி அணிவது முகத்துக்கு நன்றாக இருக்காது என்று நினைக்கும் நபர்களுக்கு மட்டும் உரித்தானது’ என்று அவர்களிடம் கூறினேன். கண்ணழுத்த நோய்க்கான தடுப்பு முறையாக மட்டுமின்றி, ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட க்ளூக்கோமா நோய்க்கான சில அறுவை சிகிச்சைகளிலும் முக்கியப் பங்கு உண்டு. கிருஷ்ண படலத்தின் ஓரத்திலுள்ள பக்கவாட்டுப் பாதையைப் பெரிதாக்கும் goniotomy, trabeculotomy சிகிச்சைகளுக்காகவும் லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இறுதிக்கட்ட கண்ணழுத்த நோயில் சிலசமயங்களில் நோயாளிக்கு கண்வலி தாங்க முடியாததாக இருக்கும், அப்போது திரவத்தின் சுரப்பை முழுவதுமாக நிறுத்த cyclodestructive procedures என்ற முறைகளிலும் லேசர் கதிரின் பயன்பாடு தேவைப்படுகிறது. கண் மருத்துவத்தில் லேசர் பரவலாக பயன்படுத்தப்படுகிறது என்ற விழிப்புணர்வு பலருக்கும் இருக்கிறது. கண்புரை அறுவை சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் வழக்கமாக கேட்கும் ஒரு கேள்வி, ‘இந்த ஆபரேஷனை லேசர் மூலமாகப் பண்ண முடியுமா?’ என்பது. தற்போது கண்புரை அறுவை சிகிச்சை பெரும்பாலும் தழும்பில்லாத வகையில்தான் செய்யப்படுகிறது. மிகச்சிறிய துவாரத்தை ஏற்படுத்தி அதன் வழியாக புரை பாதித்த லென்ஸ் நீக்கப்பட்டு, புதிய செயற்கை லென்ஸ் உள்ளே பொருத்தப்படுகிறது. கண்ணில் பெரிய அளவில் காயம் ஏற்படுத்தாத வகையில் அறுவை சிகிச்சைக்கான துளை உருவாக்குவதற்காக keratome என்ற மிகச்சிறிய கத்தி பயன்படுத்தப்படுகிறது. தற்போது அதையும் விட சிறப்பாக keratomeகளுக்குப் பதிலாக femtosecond லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகவும் நவீனமான லேசர்.நவீன கண் மருத்துவத்தில் லேசருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அது இல்லாமல் பல சிகிச்சைகள் சாத்தியமில்லை. லேசர் நவீனக் கண்டுபிடிப்புகள் மனிதனின் உடல் நலத்தை சீராக்குகின்றன, மருத்துவமனை வாசத்தைக் குறைக்கின்றன. நோயிலிருந்து விரைவில் மீண்டு வழக்கமான பணிகளுக்குத் திரும்பவும் வழிவகை செய்கிறது. லேசரா, பழைய சிகிச்சை முறையா என்ற கேள்வி வந்தால் நீங்கள் தாராளமாக லேசரை டிக் செய்யலாம்! …