துவரங்குறிச்சி, செப்.14: கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்ணுக்குழி பகுதிக்கு பேருந்து வசதி வேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று பாலக்குறிச்சியில் இருந்து மணப்பாறை வரை கள்ளப்பட்டி, கண்ணுக்குழி வழித்தடத்தில் புதிய நகர பேருந்து துவக்க விழா நடைபெற்றது.
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கலந்து கொண்டு கண்ணுக்குழி ஊராட்சி அலுவலகம் முன்பாக புதிய வழித்தடத்தில் பேருந்தை துவக்கி கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மணப்பாறை எம்எல்ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர். ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், காசிராஜன் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.