சென்னையில் பல ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீ வாசவிகன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும். கொத்தவால் சாவடியில் காய்கறி மார்க்கெட் வியாபாரம் இருந்தபோது குளத்திற்கு நடுவே அழகிய நாலு கால் மண்டபம் இருப்பது போல் கடைகளுக்கு மத்தியில் இந்த ஆலயத் தோற்றம் இருந்தது. வியாபாரத்துடன் தர்மசெயல்களில் ஈடுபட்டு மேலோங்க பண்பும் கலாச்சாரமும் தவறாமல் நன்னெறியுடன் வாழ்ந்து வரும் ஆரிய வைசியர்களுக்கு கன்னியகா பரமேஸ்வரி தான் குல தெய்வம் ஆகும்.காய்கறி மார்க்கெட் கொத்தவால்சாவடியிலிருந்து கோயம்பேடுக்கு மாற்றப்பட்ட பிறகு இந்த ஆலயத்துக்கு பக்தர்கள் சென்று வருவது மிக எளிதாக மாறியது . பார்வதி தேவியின் ஒரு அம்சமாக கன்னியகா பரமேஸ்வரி இந்த ஆலயத்தில் சாந்தமான அழகிய உருவத்துடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறாள். கீர்த்தி சிறியதாக இருந்தாலும் மூர்த்தி பெரியதாக இருக்கும் என்ற பழமொழிக்கேற்ப ஆலயம் சிறியதாக இருந்தாலும் அதன் மகிமை மிகப்பெரியதாகும். இந்த ஆலயத்தின் பின்னணியில் மிகப்பெரிய சரித்திரம் உள்ளது. இதைத் தெரிந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தால் அவளது பரிபூரண அருளை நாம் பெறலாம்.தேவலோகத்தில் ஒருசமயம் சிவபெருமான் வைசியர்கள் அனைவரையும் பூலோகம் சென்று தங்கள் கடமைகளைச் செய்யுமாறும் தான் நகரேஸ்வர ஸ்வாமியாகவும் அம்பிகை விந்தியவாசினியாகவும் தோன்றி உங்களை என்றும் காப்போம் என்றார்.ஆனால் வைசியர்கள் சிவனையும் அம்பிகையையும் பிரிய மனமின்றி பிரம்ம லோகம் சென்று பிரம்மனை போற்றினர். பிரம்மனோ, தானே பூவுலகில் பாஸ்கராச்சாரியராகப் பிறந்து உங்களின் குருவாக இருந்து வழி நடத்துவேன் என்று கூறினார். பின்னர் வைகுந்தபெருமாளை தரிசனம் செய்ய அவரும் அவர்களிடம் உலக நன்மைக்காக பூவுலகிற்குச் செல்லுங்களென்றும், தானே ஜனார்த்தன ஸ்வாமியாகவும், திருமகள் கோனக மலையாகவும் வந்து அவர்களை காப்பதாகவும்வாக்களித்தார்.வைசியர்கள், சிவன், விஷ்ணு பிரம்மன் ஆசிகளுடனும், அவர்களால் அளிக்கப்பட்ட நவநிதிகளை பெற்றுக் கொண்டு கைலாயத்தை விட்டு நீங்க மனமில்லாமல் பூலோகத்திற்கு வந்தனர்.வைசியரான சமாதி மகரிஷி, பெனுகொண்டா நகர மன்னன் குசுமசெட்டியாகப் பிறந்து குசுமாம்பாள் என்ற பெண்ணை மணந்து இறை வழியில் நல்ல பண்புகளுடன் வாழ்ந்து வந்தார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை செல்வம் இல்லை. இதனால் அவர்களுக்கு மன வேதனையும் கவலையும் இருந்தது. குலகுருவின் நல் ஆசியுடன் புத்திரகாமேஷ்டியாகம் செய்து, வசந்தருதுவில், வைகாசிமாதம் சுக்கிர வாரம் தசமி திதியில் புனர்வசு நட்சத்திரம் கூடிய நன்னாளில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன.தெய்வாம்சம் பொருந்திய பெண் குழந்தை ஒரு கையில் கிளியையும், மற்றொரு கையில் வீணையையும், மேலிரு கரங்களில் தாமரையையும், பாசத்தையும் தாங்கி நாற்கரங்களோடு, மிகுந்த அழகுடன் பெற்றோருக்குக் காட்சி தந்து பின் சாதாரண குழந்தையாக மாறினாள். அவர்களின் குலகுரு பாஸ்கராச்சாரியார் அந்த பெண் குழந்தைக்கு வாசவி என்று பெயரிட்டு ஆசீர்வதித்தார்.இதற்கிடையில் விஷ்ணுவர்த்தன் என்ற சாளுக்கிய மன்னன் ராஜமகேந்திரபுரத்தை ஆண்டு வந்தான். அவன் தன்னைச் சுற்றியுள்ள பலநாடுகளையும் வெல்லும் நோக்கத்துடன் படையெடுத்துச் சென்றான். அவ்வாறு செல்லும் வழியில் பெனுகொண்டாவில் வாசவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி அவளை மணம் முடிக்க விரும்பினான். குசுமசெட்டியிடம் சென்று வாசவியை மணம் புரிய பெண் கேட்டான்.குசுமசெட்டி தன் குலத்தாருடன் இந்த திருமணத்தை பற்றி ஆலோசனை நடத்தினார். 18 நகரங்களிலிருந்து 714 கோத்திரக்காரர்கள் நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் ஒன்று கூடி திருமணத்தை பற்றி விவாதித்தனர். அவ் விவாதத்தில் 612 கோத்திரக்காரர்கள் திருமணத்திற்கு பெண் கொடுக்கலாம் என்றும், 102 கோத்திரக்காரர்கள் திருமணத்திற்கு கொடுக்க வேண்டாம் என்றும், மேலும் அவர்கள் தங்கள் குலதர்மத்தைக் காக்க தீக்குளிக்கவும் துணிந்தனர். இதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து நாட்டை விட்டு பல திசைகளுக்கு வெளியேறினர்.விஷ்ணுவர்த்தன், வாசவியைச் சிறைபிடிக்க காவலர்களை விரைந்து அனுப்பினான். தன்னால் தான் இந்த குழப்பம் என முடிவு எடுத்த வாசவி, மன்னன் விஷ்ணுவர்த்தனிடம் அகப்படாமல் இருக்க தான் அக்னிப்பிரவேசம் செய்வதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள். வாசவியுடன் 102 கோத்திரக்காரர்கள் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டு, தம் மனைவியருடன் அக்னிப் பிரவேசம் செய்து கயிலையை அடைந்தனர். வாசவி பரமேஸ்வரரோடு ஒன்று கலந்தாள். அன்று முதல் வாசவி, கன்னியகா பரமேஸ்வரியாக எல்லோருக்கும் அருள் புரிகிறாள்.வாசவியாக வாழ்ந்த ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரியை ஆரிய வைசியர்கள் தங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு, வருடந்தோறும் அம்பிகையின் அவதார நன்னாளையும், அக்னிப் பிரவேசத்தையும் மிக சிறப்பாக தங்கள் ஆலயங்களில் கொண்டாடி வருகின்றனர். சென்னை பிராட்வேயில் கொத்தவால்சாவடியில் உள்ள ஆதியப்பா தெருவும், கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் வாசவி தேவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அம்பிகை இரு திருக்கரங்களுடன் வலது திருக்கரத்தில் மலரை ஏந்திக்கொண்டு கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னையை உற்று நோக்கினால், மதுரை மீனாட்சி அம்மனே நம் முன் நிற்பது போல் நமக்கு தோன்றும்.வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவகிரக சந்நதிகள் உள்ளன. இந்த அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சகல கிரக தோஷங்களும் நீங்கி நல்ல தொரு வாழ்க்கை பயணம் தொடரும் என்பது ஐதீகம். கருவறையின் அருகேஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரியின் உற்சவ விக்ரகம் அமைந்துள்ளது. ‘ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரியின் கதையை படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம்.இந்த அம்மனின் நைவேத்தியத்திற்கு ஊறவைத்த பச்சைப் பருப்பை வேகவைத்து, கையால் மசித்து, உப்பு காரமிட்டு செய்கிறார்கள். வாசவியின் அக்னிப் பிரவேச நாள் அன்று, அன்னையை முழு நெற்றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுகிறார்கள். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மழை போல மலர்களைக் தூவி கதவை மூடி விடுவார்கள். அன்று மாலையே கதவைத் திறந்து மலர்களை அகற்றி, உஷ்ணத்தில் இருக்கும் அம்பாளுக்கு 1000 லிட்டர் சுத்தமான கலப்படம் இல்லாத பசும்பாலில் அபிஷேகம் செய்து அம்மனை மனம் குளிர வைப்பார்கள். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தங்க கவச அலங்காரமும் செய்வார்கள்.வசந்த உத்ஸவம், நவராத்திரி விழா, ஆடி, தை வெள்ளிக்கிழமை போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெறுகின்றன. ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரி தேவஸ்தானம் என்ற தர்ம ஸ்தாபனம் மிகச் சிறந்த முறையில் இத்திருக்கோயிலை நிர்வகித்து வருகிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் அதுபோல நமக்கு இங்கு அருள் கிடைக்கும்.இவ் ஆலயத்தில் பக்தர்கள் தங்கள் உடம்பை வருத்தும் அளவுக்கு மிகக் கடுமையான வேண்டுதல்கள், வழிபாடுகள் எதையும் செய்ய வேண்டியது இல்லை. ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரி வீற்றிருக்கும்ஆலய பிராகாரத்தை அடி மேல் அடி வைத்து வலம் வந்தாலே போதும், அன்னையின் பரிபூரண அருளை நாம் முழுமையாகபெறலாம்.இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெரும் அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக ஆடி மற்றும் தை மாதத்தில் பெண்கள் அதிகளவு வந்து வழிபாடு செய்வார்கள். ஆடி மற்றும் தை மாதம் முழுவதும் இந்த ஆலயத்தில் மிக சிறப்பான பூஜைகள் நடைபெறும்.இந்த ஆலயத்தில் அன்னக்கூட நிகழ்ச்சி யானது (ஆடி மாத வெள்ளிக்கிழமை) மிகப்பெரிய உற்சவமாக நடைபெறும். காலை 9 மணிக்கு ஆலயத்தின் அருகில் உள்ள ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியில் இருந்து 102 பெண்கள் பால் குடம் எடுத்து வந்து . 10.20 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். 11.30 மணிக்கு அலங்காரம் அன்னக்கூட மகா உற்சவம் நடத்தப்படும்.102 கிலோ அரிசியை சமைத்து சாதத்தை குவித்து அன்னக்கூட மகாஉற்சவம் நடத்தப்படும். இந்த சாதம் ஸ்ரீ கன்னியகா பரமேஸ்வரிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு. மதியம் 12 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 12.15 மணி முதல் அன்னக்கூடசாதம் பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது.குடந்தை நடேசன்…
கண்ணியம் காப்பாள் கன்னியகா : பரமேஸ்வரி
previous post