திருவண்ணாமலை, ஆக.31: செம்மரக்கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பில் இருப்பதாக வந்த புகாரின்பேரில் கண்ணமங்கலம் சப்- இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன்(35). இவர் கண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த செம்மரக்கடத்தலில் ஈடுபடும் சிலருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் மீதான புகார்களை விசாரிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் வடக்கு மண்டல ஐஜிக்கு சமீபத்தில் புகார் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்து வடக்கு மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், சப்- இன்ஸ்பெக்டர் மீதான புகார் தொடர்பாக துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் புகாரில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.