கூடுவாஞ்சேரி, ஆக. 26: கண்டிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் பாழடைந்து கிடப்பதால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள நல்லம்பாக்கம், கண்டிகை, மல்ரோசாபுரம், அம்பேத்கர் நகர், காந்திநகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமம் உள்ளது. இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 498 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் மற்றும் சமையல் கூடம் ஆகியவை பாழடைந்து தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கண்டிகையில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் எம்ஜிஆர் சத்துணவு சமையல் கூடம் கட்டப்படுவதற்கு முன்பே, துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.
தற்போது, இவை இரண்டும் கடந்த 15 ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது. இதில், மருத்துவமனையும் இயங்குவதில்லை. இங்கு வாரம்தோறும் புதன்கிழமை அன்று செவிலியர் மற்றும் கர்ப்பிணிகள் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் கட்டிடத்தில் உள்ளே உட்காரவும் பயப்படுகின்றனர். மேலும், பழைய சமையல் கூடத்திற்கு பதில் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.
இதில், பாழடைந்து கிடக்கும் கட்டிடங்களை இடிக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. தற்போது, மழைக்காலமும் நெருங்கிவிட்டது. எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணிகள் உயிர் பயத்தில் உள்ளனர். எனவே, பேராபத்து ஏற்படுவதற்குள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் இங்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.